பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 9 குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே அதிர வைத்த பாலியல் வழக்கு தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கு, இன்று குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கும் என நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாலும், 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியதாலும் இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்டக் காவல்துறை முதலில் விசாரித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேர் கைது

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு இறுதியாக சி.பிஐயிடம் இந்த வழக்கு தற்போது உள்ளது. இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது25) முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அடுத்ததாக சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(25) சதீஷ் (28) ஹேரேன் பால்(29), அருளானந்தம்(34), அருண்குமார் (30) பாபு என்ற பைக் பாபு (34) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 50- க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 40 மின்னணு தரவுகள், சுமார் 200 ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 6 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி

இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (மே 13-ம் தேதி) இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். குற்றவாளிகள் நீதிமன்ற தீர்ப்புக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

கோவை நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

காலை 5.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தற்போது கோவை நீதிமன்றத்திற்கு குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு முன்னிட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் போடப்பட்டு உள்ளது. இன்று காலை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விவரங்கள் வெளியாகவுள்ளது. இதனையடுத்து கோவை நீதிமன்றத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.