- Home
- Politics
- ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டி... அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டி... அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

1033 candidates contest in single Election
இந்தியாவில் தேர்தல் என்பதே ஒரு திருவிழா தான். விதவிதமான சம்பவங்கள், சுவாரஸ்யமான செய்திகள் என தேர்தல் காலமே மிகவும் பரபரப்பாக இருக்கும். தற்போது நாம் பார்க்க இருப்பதும் அப்படி ஒரு சம்பவத்தை தான். நம்ம தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற ஒரு ருசீகர சம்பவத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த தொகுதியில் இருந்து மட்டும் அந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்.
50 பக்கத்துக்கு வேட்பாளர் பட்டியல்
ஈரோடு மாவட்ட விவசாயிகள் அவர்களுடைய 33 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 1996-ம் ஆண்டு தாங்களே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தனர். அந்த 1033 வேட்பாளர்களில் 1029 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கான தேர்தலையே ஒரு மாதம் தள்ளிவைத்தது. இந்தியாவோட தேர்தல் வரலாற்றிலேயே வேட்பாளர் பட்டியல் மட்டுமே 50 பக்கத்துக்கு இருந்தது இந்த தேர்தலில் தான். தேர்தல் ஆணையம் அந்த ஒரு தொகுதிக்கும் மட்டும் வாக்காளர்கள் வாக்கு செலுத்த கூடுதலாக நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.
தலைசுற்றிப்போன அதிகாரிகள்
ஏனெனில், ஒவ்வொரு வாக்காளரும் 50 பக்க வாக்காளர் பட்டியலை பார்த்து முடிவெடுத்து வாக்கு செலுத்த வேண்டும் என்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பின்னாளில் இந்த சம்பவத்தைப் பற்றி சொன்ன விவசாய சங்கத் தலைவர்கள், இது எங்களுடைய கோரிக்கை அரசாங்கத்துக்கு கேட்கணும், அவர்கள் திரும்பிப் பார்க்கணும் என்பதற்காக தான், இப்படி செய்தோம் என கூறி இருந்தனர். மொடக்குறிச்சி தொகுதியில் நடந்த இந்த சம்பவத்துக்கு பின்னர் தேர்தல் ஆணையம் தடாலடி முடிவெடுத்து, தங்களுடைய விதிகளில் அதிரடி மாற்றம் ஒன்றைக் கொண்டுவந்தது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி சட்ட திருத்தம்
மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1956-ல் திருத்தம் செய்து வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்தார்கள். அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் என்பவர் தான் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான ஆர்.என்.கிட்டுசாமி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட விவசாயிகள் பெரியளவில் வாக்குகளை பெறாவிட்டாலும், அவர்கள் தங்கள் தொகுதியை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும்படி செய்துவிட்டார்கள். ஒரு தொகுதியில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டது இந்த மொடக்குறிச்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

