பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த இரண்டு போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திமுக- பாஜக போட்டி : தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே நீயா.? நானா என்ற போட்டியானது நிலவி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்தரன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

பாஜக தேசிய கொடி பேரணி

இதனையடுத்து இருதரப்பும் ட்ரோன் மூலம் தாக்குதலை நடத்தியது. இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் தேசிய கொடியோடு பேரணியானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூரில், பாஜக சார்பில் கடந்த 16ம் தேதி நடந்த மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த பேரணிக்கு பிறகு வேலம்பாளையம் சாலையில் உள்ள ஹோட்டலில் ஓய்வெடுத்தார்.

நயினாரை ஹோட்டலில் சென்று சந்தித்த காவலர்கள்

அந்த ஹோட்டலில் நயினார் நாகேந்திரனை பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் சீருடை அணிந்த இருவர், அங்கு வந்து நயினாரை சந்தித்து பேசினர். இதனையடுத்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் இருவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், இரண்டு பேரும் சகோதரர்கள் என கூறப்படுகிறது. 

இத்தகவல், உளவுப்பிரிவு போலீசாரால் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு மந்திரம் மற்றும் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு சின்னசாமி ஆகியோர் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

பணி மாற்றம் செய்து உத்தரவிட்ட கமிஷனர்

பணி நேரத்தில் சீருடையில், தனிப்பட்ட முறையில் அரசியல் பிரமுகரைச் சென்று சந்தித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் இருவர் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.