டிஎஸ்பி சுந்தரேசனின் அலுவலக வாகனம் திரும்பப் பெறப்பட்டதால், நடந்தே அலுவலகம் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தரப்பில் சுந்தரேசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

DSP Sundharesan vehicle seizure : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட அலுவலக வாகனம் எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் அவர் சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த 2024 நவம்பர் முதல் மயிலாடுதுறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கள்ளச்சாராய விற்பனை மற்றும் மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்ததாகவும், 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகவும் சுந்தரேஷன் தெரிவித்துள்ளார். 

மேலும் தான் நேர்மையாக இருப்பதால் உயர் அதிகாரிகள் தன்னை பழிவாங்குவதாகவும், "டார்ச்சர்" செய்வதாகவும் சுந்தரேசன் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்து பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து, சுந்தரேசன் கூறியவை தவறான தகவல்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் டிஎஸ்பி சுந்தரேஷன் மீது அடுக்கான புகார்களை காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

டிஎஸ்பி சுந்தரேசன் மீதான புகார்

  • டிஎஸ்பி சுந்தரேசன் 2005 - 2006 வரை நந்தம்பாக்கத்தில் பணிபுரிந்தபோது வழக்கு ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என ஒழுங்கு நடவடிக்கை
  • வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு
  • 2008ல் துரைப்பாக்கம் காவல் எல்லையில் முடிவுற்ற வழக்கை சுட்டிக்காட்டி மிரட்டி ரூ.40,000 கையூட்டு வாங்கியதாக சுந்தரேசன் மீது குற்றச்சாட்டு
  • துரைப்பாக்கம் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூ.3000 வாங்கியதாக சுந்தரேசன் மீது குற்றச்சாட்டு
  • துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது பெண்ணிடம் புகார் வாங்காமல் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பழகி வந்ததாக குற்றச்சாட்டு
  • தனக்கு பழக்கமான பெண்ணை உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் குற்றச்சாட்டு
  • காவல் நிலையத்தில் இருந்த காவலர்களை தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு