டெல்லியில் அன்புமணிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 100 பேர் கூட கூடாதது ராமதாஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்மூலம் பாமகவில் அன்புமணி கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையம் சென்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று வாதத்தை முன்வைத்த தேர்தல் ஆணையம் எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தான் அன்புமணியை தலைவர் என கூறினோம். கட்சிக்கு உரிமை கோரினால் ராமதாஸ் தரப்பு உரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியது.
அன்புமணிக்கு எதிராக போராட்டம்
இதன்பிறகு நீதிமன்றம் தனது உத்தரவில் அங்கீகரிக்கபடாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி இந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் நாடலாம் என இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், அன்புமணிக்கு எதிராகவும், அவரை பாமக தலைவர் எனக்கூறிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ராமதாஸ் தரப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடந்தது.
100 பேர் கூட கூடவில்லை
ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ அருள் உள்பட ராமதாஸ் தரப்பினரை சேர்ந்த பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், அன்புமணிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போரட்டத்தில் அன்புமணிக்கு எதிராக ஆயிரக்கணக்கில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100 பேர் கூட கூடாதது ராமதாஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஹிந்திக்காரர்கள்
அதுவும் அங்கு கூடிய ஜி.கே.மணி, அருள் என பாமக நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் பத்து முறை கூட்டினால் கூட 10 பேர் தான் இருந்தனர். மேலும் ஆட்கள் கிடைக்காமல் வாடகைக்கு ஹிந்திக்காரர்களை பணம் கொடுத்து அழைத்து வந்து அவர்களுக்கு ராமதாஸ் மூகமூடி அணிவித்து போராட்டத்தில் பங்கேற்க செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் கேலிப் பொருளாகியுள்ளது. ராமதாஸ் தரப்பிடம் அவருக்கு ஆதரவாக ஒரு 100 பேர் கூடவா இல்லை? பாமகவை திராவிட கட்சிகளுக்கு போட்டியளிக்கு வகையில் உருவாக்கிய ஐயா ராமதாஸுக்கா இந்த நிலைமை? என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணியின் கை ஓங்குகிறது
இதேபோல் தங்களுக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் இருந்து 100 கூட போராட்டத்தில் கூடாதது அன்புமணி தரப்புக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. ''பாமகவில் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம் உள்ளனர். நீங்கள் தேர்தல் ஆணையம் சென்றாலும் சரி, நீதிமன்றம் சென்றாலும் சரி அன்புமணி பின்னால் இருக்கும் சக்தியை அசைத்துப் பார்க்க முடியாது. ராமதாஸை ஜி.கே.மணி, அருள் ஆகியோர் தவறாக வழிநடத்தக் கூடாது'' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பாமகவில் அன்புமணியின் கை தொடர்ந்து ஓங்கி வருவது ராமதாஸுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


