அன்புமணி பாமக தலைவரும் இல்லை; மாம்பழ சின்னமும் அவர்களுக்கு கிடையாது என டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக டெல்லியில் ராமதாஸ் தரப்பு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இருவரும் தேர்தல் ஆணையம் சென்றனர். இரு தரப்பு ஆவணங்களையும் ஆராய்ந்த தேர்தல் ஆணையம் '2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன'' என்று அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்வதாக கூறிய ராமதாஸ் தரப்பு, இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்த நிலையில், அன்புமணி தரப்பும், ராமதாஸ் தரப்பும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தன. அப்போது தேர்தல் ஆணையம் எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தான் அன்புமணியை தலைவர் என கூறினோம். கட்சிக்கு உரிமை கோரினால் ராமதாஸ் தரப்பு உரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியது.
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீகரிக்கபடாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது. அங்கீகரிக்கபடாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டதுடன் பாமக உரிமை கோரல் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் நாடலாம் எனக்கோரி வழக்கை முடித்து வைத்தார்.
நான் தான் தலைவர்
இதற்கிடையே நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி, ''கட்சியின் தலைவர் நான் தான். மாம்பழம் சின்னமும் எங்களுக்கு தான். தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எங்களுடன் உள்ளனர்'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அன்புமணி தரப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக ராமதாஸ் தரப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தினார்கள். இதில் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புமணி தலைவர் என சொல்லக் கூடாது
இந்த போராட்டத்துக்கு முன்பு பேசிய ஜி.கே.மணி, ''அன்புமணி தலைவர் என கூறிக்கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது ராமாதாஸுக்கும், பாமகவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அன்புமணி தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு போலி ஆவணங்கள் கொடுத்து 2026ம் ஆண்டு வரை பதவியில் இருப்பேன் என கூறி வருகிறார். நீதிமன்ற உத்தரவின் மூலம் பாமகவுக்கு தான் தலைவர் என அன்புமணி கூற முடியாது. மாம்பழ சின்னமும் அவர்களுக்கு கிடையாது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது'' என்றார்.


