பாமக, மாம்பழ சின்னத்திற்கு தந்தை, மகன் உரிமை கோரிய நிலையில் சின்னம், கட்சி எனக்கு தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதலால் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதனிடையே இரு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது. அன்புமணியின் பதவி்க்காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. மேலும் அவரை கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டோம் ஆனால் அவரை தலைவர் என தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. இது சட்ட விரோதமானது என கோரப்பட்டது. ஆனால், கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு செய்து பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரே கட்சியின் தலைவராக இருக்கிறார் என்று வாதிடப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில், “எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி கட்சியின் தலைவர். ராமதாஸ் தரப்பிடம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்கலாம். மேலும் பாமக ஒரு அங்கீகாரம் இல்லாத கட்சி. அப்படிப்பட்ட சூழலில் கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. இரு தரப்பும் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். மேலும் வேட்பாளர்களுக்கான பார்ம் A, Bயில் இருவரில் ஒருவர் மட்டும் தான் கையெழுத்திட முடியும். இரு தரப்பும் உரிமை கோரும் பட்சத்தில் சின்னம் முடக்கப்படும் என்று தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு வலியுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, “2026 ஆகஸ்ட் மாதம் வரை பொதுக்குழுவால் எனக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். வாதங்களை கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது. எனவே கட்சியின் தலைவர் நான் தான். மாம்பழ சின்னமும் எனக்கு தான்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.