PMK Crisis: Arul vs Anbumani Clash: அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறிய அருள் தனது நாவை அடக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் பெரிதாக வலுத்து வருகிறது. பாமகவில் தங்களுக்கே உரிமை உள்ளது எனக்கூறி இருவரும் தேர்தல் ஆணையம் சென்றனர். இதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் பாமகவுக்கு அன்புமணி தரப்பே உரிமை கொண்டாட முடியும் என்று அதிரடியாக அறிவித்தது.
பாமக அன்புமணிக்கே சொந்தம்
மேலும் '2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன'' என்று ராமதாஸ்க்கு தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியது. இதனால் ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது என ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்
மேலும் ஒரு படி மேலே சென்ற ராமதாஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ அருள், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அருள், ''ராமாதாஸால் தலைவராக்கப்பட்டவர் தான் அன்புமணி. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அதை மறைத்து விட்டு அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் பொய் சொல்லி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை ஜெயிலில் அடைக்க வேண்டும். அன்புமணி தந்தையையே கொலை செய்ய முயற்சிக்கிறார். அதே போல் என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்'' என்றார்.
அருளுக்கு நாவடக்கம் தேவை
இந்த நிலையில், எம்.எல்.ஏ அருளுக்கு நாவடக்கம் தேவை என்று அன்புமணி தரப்பை சேர்ந்த பாமக கணேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அருளுக்கு நாவடக்கம் தேவை. அப்படி இல்லையென்றால் பாமக அருளின் நாவை அடக்கும். ஒருவருக்கு புத்தி பேதலித்து விட்டால் இருப்பது இல்லாத மாதிரி தோன்றுமாம். இல்லாதது இருப்பதுபோல் தோன்றுமாம். அப்படி ஏதோ ஒரு மாய உலகத்தில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மருத்துவர் ஐயா ராமதாஸ் குறித்தும், மருத்துவர் அன்புமணி குறித்தும் அனைவருக்கும் தெரியும். அவர் தந்தை இவர் மகன்.
ராமதாஸ் உயிரை காப்பாற்றியது யார்?
மரக்காணம் பிரச்சனையில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்த ராமதாஸுக்கு மூச்சுத்திணறல். அப்போது அருள் போய் பார்த்தாரு. ராமதாஸின் உயிரை காப்பாற்றிக் கொண்டு வந்தவர் அன்புமணி தான். இப்போது மருத்துவ சிகிச்சை என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் ஓடிப்போய் நின்றவர் அன்புமணி. உண்மை என்ன என்று அவருக்கும், மக்களுக்கும் தெரியும். ஆகவே அருள் அரசியல் லாபத்துக்காக தேவையில்லாமல் அருள் பேசக்கூடாது. அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினால் நாங்களும் பேசுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.


