அன்புமணி ஒரு தூசு..! சிறையிலே அடைக்க வேண்டும்..! பாமக எம்எல்ஏ அருள் அதிர்ச்சி பேச்சு
தன்னை பெற்றெடுத்த தந்தை இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒரு மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கி அன்புமணி அவர்களை தலைவர் ஆக்கிய ஐயா ராமதாஸுக்கு செய்து கொண்டிருக்கிற துரோகம் ஒன்றா, இரண்டா?

‘‘தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி மீது மருத்துவர் ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்’’ என பாமக எம்.எல்.ஏ அருள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் மருத்துவர் ராமதாஸ் தலைமை தாங்கிய பாமக நிகழ்ச்சியில் பேசிய பாமக எம்.எல்.ஏ அருள் பேசுகையில், ‘‘இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு போர். ஒரு குருஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தூசுக்கும், இமயமலைக்கும் இடையிலே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அன்புமணி ஒரு தூசு. எதுக்கும் பயன்படாத ஒரு தூசு. ஒரு அந்த சின்னப் புள்ளி, இன்றைக்கு மருத்துவர் ஐயா என்ற ஒரு இமயமலையோடு மோதுகிறது. இன்னைக்கு பல திட்டங்களை, பல சதிகளை, பல துரோகங்களை பல்வேறு விதமான கோடிகளை இறைத்துக்கொண்டிருக்கிறது.
எல்லோருக்கும் தெரியும். பெற்றெடுத்த அப்பா, அம்மாவ மதிக்காத யாரும் இந்த தமிழ்நாட்டிலே யாருமே தலைவராக வந்ததில்லை. இன்றைக்கு நான் உங்களிடம் சொல்றேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய அம்மா சத்யா. அவரை தினமும் கோயில் கட்டி கும்பிடாத அளவுக்கு வழிபட்டு விட்டு தான் செல்லுவார். கலைஞர் அவருடைய தாய் அஞ்சுகம் அம்மையாரையும், அவருடைய அப்பா முத்து வேலையும் தினமும் பார்க்காமல் வெளியே போக மாட்டார். புரட்சித்தலைவி என்று சொல்லப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய தாய் சந்தியாவை கடவுளுக்கு நிகராக பார்த்தவர். இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அப்பா கலைஞர் அவர்களுக்கு 94 வயது வரை அவருடைய உதவியாளர் போல இருந்து செயல்பட்டவர்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் பெற்றெடுத்த தாயோடு உணவு அருந்துவதையே மிகவும் பெரிய பாக்கியமாக கருதியவர். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்த இந்த நாட்டிலே தன்னை பெற்றெடுத்த தந்தை இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒரு மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கி அன்புமணி அவர்களை தலைவர் ஆக்கிய ஐயா ராமதாஸுக்கு செய்து கொண்டிருக்கிற துரோகம் ஒன்றா, இரண்டா? தேர்தல் ஆணையம் ஒரு நீதிமன்றத்திற்கு சமமான ஒரு அமைப்பு. அந்த தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல் கொடுத்திருக்கிறார். 2022 ஐந்தாவது மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு தேர்தல் நடக்கிறது. அந்த பொதுக்குழுவிலே மருத்துவர் ஐயா அவர்கள் தலைவராக அன்புமணி முன்மொழிகிறார்.
அன்றைக்கு மருத்துவ அய்யா அவர்களால் தலைவராக்கப்பட்ட அன்புமணி. எல்லா கடிதமும் ஆதாரத்தோடு இருக்கிறது. அந்த ஆதாரத்தை எல்லாம் மறைத்துவிட்டு நீதிமன்றத்திற்கும் ஒரு படி மேலான தேர்தல் ஆணையத்தில் 2023 நான் தலைவராக தேர்வானேன் என்று சொல்லி ஒரு செய்தியை கொடுக்கிறார். நீதிமன்றத்திற்கு நிகரான தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி அன்புமணி மீது மருத்துவர் ஐயா அவர்களே, செயல் தலைவர் அக்கா அவர்களே நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும். இந்த கடலூர் என்பது மருத்துவர் ஐயாவுடைய கோட்டை. புயலுக்கும் பணியாது, புனலுக்கும் பணியாது. நான் அய்யாவிடத்தில் சொல்கிறேன். நீங்கள் நீதிமன்றத்தை ஏமாற்றிய அன்புமணி மீது வழக்கு தொடர வேண்டும். போலி பத்திரம் மூலம் நிலத்தை புடுங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்க ஐயா 46 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய கட்சி. நிச்சயமாக நம்முடைய தலைவர் மருத்துவர் ஐயாவுக்கு தான் மாம்பழச் சின்னம் கிடைக்க வேண்டும்’’ எனப்பேசியுள்ளார்.
