பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். பிரதமர் இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடி, விருதுகளையும் வழங்க உள்ளார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் புதன்கிழமை (நவம்பர் 19) முதல் மூன்று நாள்கள் நடைபெற உள்ள வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பீகார் தேர்தல் முடிந்து, அம்மாநிலத்தில் பதவியேற்புகூட நிறைவடையாத நிலையில், பிரதமர் மோடி தமிழகத்தில் கால் பதிப்பது பாஜகவின் தமிழகத்தின் மீதான கவனத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
நாளை (நவ. 19) கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள இம்மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி மாநாட்டைத் தொடங்கிவைத்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்த நம்மாழ்வாருடன் பணியாற்றிய விவசாயிகளுடன் கலந்துரையாட இருக்கிறார்.
இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் பிரத்யேக அரங்குகளையும், விவசாய உற்பத்திப் பொருள்களையும் அவர் பார்வையிடுகிறார்.
உற்பத்தியைப் பெருக்குதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரித்து பிரதமரிடம் வழங்க உள்ளோம். இது இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கப் பெரிதும் உதவும்.
விருதுகள், வேளாண் கண்காட்சி
இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துள்ள 10 விவசாயிகளுக்குப் பிரதமர் மோடி விருது வழங்கவுள்ளார். மாநாட்டில் அமைக்கப்படும் 200 அரங்குகளை விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இலவசமாகப் பார்வையிடலாம்.
இது முழுமையாக விவசாயிகள் நடத்தும் மாநாடு என்பதால், மாநில முதல்வர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
பிரதமரின் பயணத் திட்டம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை (நவ. 19) நண்பகல் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பிற்பகல் 1.30 மணிக்கு காரில் கொடிசியா அரங்குக்குச் செல்கிறார்.
விழா முடிந்ததும் பிற்பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையம் திரும்பி, 3.30 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமரின் வருகைக்காக 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். நகரின் பல பகுதிகளில் வாகனத் தணிக்கைகள் செய்யப்பட்டு, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடிசியா வளாகம் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ. 18) காலை 6 மணி முதல் 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை வாகனங்களை நிறுத்தக் கூடாது. இருப்பினும், முனையம் முன்பு பயணிகள் 3 நிமிடங்களுக்குள் ஏற்றி இறங்க எந்தத் தடையும் இல்லை.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, கொடிசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள சிங்காநல்லூர், SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஸோன்’-களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை இரவு 7 மணி வரை இப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
