மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணியாளர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது எதிர்கால திட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றார். பிரதமருடன் கலந்துரையாடலில், பணியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (புல்லட் ரயில்) திட்டத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இது, எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுபவங்களை தொகுக்க அறிவுறுத்தல்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (சனிக்கிழமை) மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டப் (MAHSR) பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், இந்தத் திட்டத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாகப் பதிவுசெய்தால், புல்லட் ரயில் திட்டங்களை நாடு முழுவதும் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு அது மிகவும் துல்லியமான வழிகாட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா, மீண்டும் மீண்டும் பரிசோதனைகளைச் செய்வதைத் தவிர்த்துவிட்டு, ஏற்கனவே உள்ள திட்டங்களில் இருந்து கற்றறிந்த பாடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு குறிப்பிட்ட செயல் ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே, அந்த நடைமுறையைப் பின்பற்றுவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய பதிவேடுகளைப் பராமரிப்பது எதிர்கால மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். "நாம் நமது வாழ்க்கையை இங்கு அர்ப்பணித்து, நாட்டிற்குப் பயனுள்ள ஒன்றைப் விட்டுச் செல்வோம்" என்று பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.

பணியாளர்களின் அனுபவப் பகிர்வு

திட்டத்தின் முன்னேற்றம், வேக இலக்குகள் மற்றும் கால அட்டவணை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். திட்டப்பணிகள் எந்தவிதமான சிரமமும் இன்றி சீராக முன்னேறி வருவதாகப் பணியாளர்கள் பிரதமரிடம் உறுதி அளித்தனர்.

கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், குஜராத் மாநிலம் நவ்சாரியில் உள்ள தொழிற்சாலையில் (Noise Barrier Factory) பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அங்கு, கம்பி கூண்டுகளை (rebar cages) பற்றவைக்க ரோபோ அலகுகள் பயன்படுத்தப்படுவதை அவர் விளக்கினார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றுவது தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஒரு 'பெருமைக்குரிய தருணம்' மற்றும் 'கனவுத் திட்டம்' என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த முன்னணிப் பொறியியல் மேலாளர் ஷ்ருதி என்பவர், திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கட்டுப்பாட்டு செயல்முறைகளை விளக்கினார். எந்தவொரு பிழையும் இன்றி திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு கட்டத்திலும் சாதக பாதகங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப தீர்வு காண முயல்வதாக அவர் தெரிவித்தார்.

தேச சேவை உணர்வு குறித்துப் பேசிய பிரதமர், நாட்டிற்காகப் பணியாற்றுகிறோம், புதிய பங்களிப்பைச் செய்கிறோம் என்ற உணர்வு எழும்போது, அது அளவற்ற உத்வேகத்தின் ஆதாரமாக மாறும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை இதற்கு உதாரணமாகக் கூறினார். நாட்டின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியபோது விஞ்ஞானிகள் எப்படி உணர்ந்தார்களோ, அதேபோல் இன்று நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

புல்லட் ரயில் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் (MAHSR) சுமார் 508 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் குஜராத் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலியில் 352 கி.மீ மற்றும் மகாராஷ்டிராவில் 156 கி.மீ தூரம் அடங்கும். இந்தப் பாதை சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும்.

சர்வதேசத் தரத்திற்கு இணையாக மேம்பட்ட பொறியியல் நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், சுமார் 85 சதவீதப் பாதை (465 கி.மீ) உயர்மட்டப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 326 கி.மீ உயர்மட்டப் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன, மேலும் 25 நதிப் பாலங்களில் 17 பாலங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் முடிந்ததும், மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையேயான பயண நேரம் சுமார் இரண்டு மணிநேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.