2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு  இன்று தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு என 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

மதுரை, வேலூர், கடலூர், சேலம், கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் 50 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம்) அரசுத் தேர்வுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 
.
தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.,இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.