தமிழக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் நமக்கு நாமே திட்டம் மூடுவிழா நோக்கிச் செல்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலையிட்டு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Namakku naame scheme : தமிழக அரசு திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத காரணத்தால் மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் முதலைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு திட்டத்தை தொடங்கினால் மட்டும் போதாது, அந்தத் திட்டம் தொடர்ந்து மக்களை சென்றடைகிறதா என்பதையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தத் திட்டம் வெற்றி அடையும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில், தொடர் கண்காணிப்பு என்பது முழுமையாக இல்லை. இந்த வகையில், தி.மு.க. அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டமும் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் திட்டங்கள்
நமக்கு நாமே திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றோர் 30 விழுக்காடு நிதியினை அளிக்கும்பட்சத்தில், மீதமுள்ள 70 விழுக்காடு நிதியினை அரசு வழங்கி அந்தத் திட்டத்தினை நிறைவேற்றும். இந்தத் திட்டம் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்பு துவங்கப்பட்டது. மாநகாட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட நகர்புற பகுதிகளுக்காக துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், 2021-2022 ஆம் ஆண்டு 148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 926 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் ஆண்டு 208 கோடி ரூபாய் மதிப்பில் 947 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2023-2024 ஆம் ஆண்டு 98 கோடி ரூபாய் மதிப்பில் 529 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2024-2025 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பு நிதியாண்டில் மேலும் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல இந்தத் திட்டம் மூடுவிழாவை நோக்கிச்
சென்று கொண்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமே இந்த கதியில் இருக்கிறது என்றால், மற்ற திட்டங்களை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான நிதியை அரசாங்கம் விடுவிக்காதது, சில நேர்வுகளில் நிதி தாமதமாக விடுவிக்கப்படுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றி இடங்களை மீட்டெடுப்பதற்கு அரசு சார்பில் எவ்விதமான உதவியும் வழங்கப்படாதது போன்றவைதான் நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.
நிதி ஒதுக்காததால் மூடுவிழா நோக்கி செல்லும் அரசின் திட்டங்கள்
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவிற்கு வெளியே மரங்கள் அடங்கிய தோட்டம் அமைக்கப்பட்டதாகவும், அந்தத் தோட்டத்தில் மறைந்த தலைவரின் பதாகை வைப்பதற்காக அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு இந்தத் திட்டத்தின் செயல்பாடு இல்லை. முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியை உரிய நோத்தில் ஒதுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவவும், இந்தத் திட்டத்திற்கென தனி இணையதளத்தை உருவாக்கி அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
