OPS vs EPS : துரோகி'பத்துத் தோல்வி'பழனிசாமி.. எனது விசுவாசத்தைப்பற்றி பேச அருகதை இல்லை-இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை பலப்படுத்துதுவற்கு 'பத்துத் தோல்வி' பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் பிரிந்துள்ளனர். இந்தநிலையில் அமைதிகாத்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.
முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் திரு. எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.
துணை முதல்வர் பதவி கேட்கவில்லை
2017 ஆம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு 'ஒருங்கிணைப்பாளர்' பதவி தந்ததாகவும், 'துணை முதலமைச்சர்' பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017 ஆம் ஆண்டு 'தர்ம யுத்தம்' நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு 'ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்', 'துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்' என்று கேட்கவில்லை. நான், 'தர்ம யுத்தம்' சார்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16-வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டியபோது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து,
அதற்கு மறுநாள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த விசுவாசிகளான திரு. எஸ்.பி. வேலுமணியும், திரு. பி. தங்கமணியும், சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து, நாம் ஒன்று சேர்ந்தால்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன்.
இபிஎஸ்க்கு எதிராக எம்எல்ஏக்கள்
நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. இனியும் கேட்கமாட்டேன். திரு. பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார். மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பின், சின்னம்மா அவர்களின் தயவால் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட திரு. எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது,
அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில், 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து மேதகு ஆளுநரைச் சந்தித்து, திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், திரு. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103-ஆக குறைந்தது. இது தவிர, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
தூதுவிட்டு கெஞ்சியர் இபிஎஸ்
இதையும் சேர்த்தால், திரு. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 98-ஆக இருந்தது. அதாவது. ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்பொழுது, பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டுமென்று மேதகு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தி.மு.க. அந்தச் சமயத்தில் மேதகு ஆளுநர் அவர்கள் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டிருந்தால், திரு. எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்தச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் திரு. எடப்பாடி பழனிசாமி.
என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு திரு எடப்பாடி பழனிசாமியும் என்று கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், ஒத்துக் கொண்டதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தார் திரு. எடப்பாடி பழனிசாமி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நலன் கருதி நான் அதனை ஏற்றுக் கொண்டேன். இது கட்சியின் மீது எனக்குள்ள விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. துணை முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில், முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இருப்பினும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வற்புறுத்தியதன் காரணமாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
குறைந்த வாக்கு சதவிகிதம்
.'இரட்டைத் தலைமை' இருந்தக் காலகட்டத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 22 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 31.05. 'ஒற்றைத் தலைமை' வந்த பிறகு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 34 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வாக்கு சதவிகிதம் வெறும் 20,46. கூட்டணிக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வாக்கு சதவீதமான 2.59 விழுக்காட்டினை சேர்த்தால், மொத்த வாக்கு சதவீதம் 23.05. எட்டு சதவிகித வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இழந்திருக்கிறது.
அதிமுக ஒன்றுபட வேண்டும்
ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோயிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில், ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது இதுவே முதல் தடவை. இந்தச் சாதனையைப் படைத்தவர் திரு. எடப்பாடி பழனிசாமி.12 இடங்களில் மூன்றாவது இடத்திற்கும், ஒரு இடத்தில் நான்காவது இடத்திற்கும் சென்றது. விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெறும் 5,267 வாக்குகளை
மட்டுமே பெற்றது. 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது,
கிட்டத்தட்ட 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துவிட்டது. இந்த உண்மையை ஒப்புக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபட வேண்டும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை 2026 ஆம் ஆண்டு அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
எடப்பாடியை நிராகரித்த தொண்டர்கள்
இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். திரு. எடப்பாடி பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் 'படுதோல்வி' எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். தோல்வியின் மறுவுருவமாக விளங்கும் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையை எந்தத் தொண்டனும், பொதுமக்களும் ஏற்காத நிலையில்,
பிளவுபட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் 50 ஆண்டிற்கும் மேலாக இயங்கி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுப்பெறும். இதனை மனதில் வைத்துத்தான் கழகம் இணைய வேண்டுமென்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன். இது பழனிசாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்காத நிலையில், 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று திரு. எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பதவி விலகனும்
எந்தக் காலத்திலும் நான் திரு. எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய திரு. எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை.
இதனை புரிந்து கொண்டு, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை பலப்படுத்துதுவற்கு 'பத்துத் தோல்வி' பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக திரு. எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.