ஜெயலலிதா ஆட்சி அமைக்கவும்.. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கும் முக்கிய காரணமே ராமதாஸ் தான் - டிடிவி தினகரன்
தமிழகத்தில் ஒரு மாதத்தில் 150 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி மிகப் பெரிய வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், ஆளுங்கட்சியின் அராஜகத்தால் காவல்துறை கை கட்டப்பட்டுள்ளது என விமர்சித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு ஓய்கிறது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ளனர். வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பாமக சார்பாக போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விமர்சித்து பேசினார். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவார் என கூறினார்.
ஒரு மாதத்தில் 150 பேர் கொலை
பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது ஒரு மாதத்தில் 150 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி மிகப் பெரிய வருத்தம் அளிக்கிறது. ஆளுங்கட்சியின் அராஜகத்தால் காவல்துறை கை கட்டப்பட்டுள்ளது. கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது. எனவே ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
அதிமுக வெற்றிக்கு பாமக காரணம்
தொடர்ந்து பேசிய அவர், 1998 பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 30 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற உதவியாக இருந்தவர்கள் பாமகவினர். 2001 தேர்தலிலும் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தவர் ராமதாஸ், 2009ல் அன்புமணி ராமதாஸ் மத்தியில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவளித்தார். அதனால் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் எங்கிருந்தாலும் மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.
அண்ணாமலை கலர் பச்சோந்தி! துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்: இபிஎஸ்