OPS vs EPS : அதிமுகவில் இடம் இல்லை... பாஜகவில் இணையப்போறேனா.? அலறி அடித்து பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நான்கு பிளவாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. தேர்தலில் வாக்குகள் ஒன்றிணைக்க முடியாமல் சிதறுவதால் அதிமுக கடந்த 8 தேர்தலிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து அதிமுகவை ஒருங்கிணைத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட ஒற்றை தலைமை முழக்கத்தின் காரணமாக ஓ பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்து சட்ட போராட்டம் மேற்கொண்டார். இதன் காரணமாக அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
பாஜகவிற்கு ஓபிஎஸ் ஆதரவு
தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும் பாஜகவின் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாகவே தலை காட்ட தொடங்கினார். குறிப்பாக பாஜக கூட்டணி கட்சித் தலைவர் கூட்டம், பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதன் காரணமாகவே எந்த நேரமும் பாஜகவில் இணைவார்கள் என கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் ஓ பன்னீர்செல்வத்துடன் இருந்த ஒரு சிலர் பாஜகவில் இணைந்தனர். மற்றொரு தரப்பினாரோ அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
பாஜகவில் இணையப்போறேனா.?
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வத்திடம், தேர்தல் தோல்வி தொடர்பாகவும், வாக்கு சதவிகிதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அண்ணாமலையின் கடின உழைப்பும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க முக்கியமான காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் களத்தில் இறங்கி பாஜக வளர்ச்சிக்காக பாடுபட்டார் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தாங்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் தொடர்பான கேள்விக்கு, என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள் என பதில் அளித்தார்.