திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு தேர்தல் நாடகம் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மது விற்பனை மூலம் குடும்பங்களிடமிருந்து லட்சக்கணக்கில் பறித்துவிட்டு, மாதம் ரூ.1000 வழங்குவது பெண்களை ஏமாற்றும் செயல்.

மாதம் ரூ.1000 தருவதால் பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று கூச்சமே இல்லாமல் பொய் கூறுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் காதுகளில் பூவை அல்ல... பூ மாலையையே சூட்ட திமுக அரசு முயற்சி செய்கிறது என்பது தான் உண்மை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கூடுதலாக 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து மாபெரும் விளம்பர நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி முடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை மறைப்பதற்காக இத்தகைய பிரச்சார நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் நேற்று நடத்தப்பட்ட மாபெரும் நாடகம் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை. மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத் திருட்டு நடவடிக்கை தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே மகளிர் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் திட்டமாக இதைத் தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை.

2021-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இரண்டரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 6 மாதங்கள் முன்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் திட்டத்தின்படி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதைக் காற்றில் பறக்கவிட்டு 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகையை வழங்கியது. மீதமுள்ள 1.25 கோடி பெண்களுக்கு, தேர்தல் வாக்குறுதியின்படி உதவித் தொகை வழங்காமல் திமுக ஏமாற்றியது.

அதனால், மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பையும், வெறுப்பையும் சமாளிக்கும் வகையில், மீதமுள்ள மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு மே மாதம் முதல் கூறி வந்த திமுக அரசு, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கோடி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை விழா நடத்தி தொடங்கி வைத்திருக்கிறது. அடுத்த 4 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.4,000 மட்டுமே வழங்கப்படவிருக்கும் இந்தத் திட்டத்திற்காக ரூ.4 கோடிக்கும் கூடுதலாக மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்திருக்கிறது திமுக அரசு. இந்த நாடகங்களுக்கு எல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1.16 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை தலா ரூ.27 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேறி விட்டதாகவும், பொருளாதாரத் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதை விட குரூரமான நகைச்சுவை எதுவும் இருக்க முடியாது. ஒரு லிட்டர் பால் ரூ.80க்கு விற்பனையாகும் திமுக ஆட்சியில், 1000 ரூபாயைக் கொண்டு 13 நாள்களுக்கான பால் செலவைக் கூட சமாளிக்க முடியாது. ஆனால், மாதம் ரூ.1000 தருவதால் பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று கூச்சமே இல்லாமல் பொய் கூறுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் காதுகளில் பூவை அல்ல... பூ மாலையையே சூட்ட திமுக அரசு முயற்சி செய்கிறது என்பது தான் உண்மை.

உண்மையில், திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேறவில்லை. கடுமையான நெருக்கடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் தான் ஆளாகியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கு மது வணிகம் செய்யப்படுகிறது. அதேபோல், சட்டவிரோதமாக இயங்கும் சந்துக் கடைகள், குடிப்பகங்கள் மூலம் மேலும் ரூ.75 ஆயிரம் கோடிக்கு மது விற்கப்படுகிறது. இப்படியாக திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி மக்களின் வரிப்பணம் மதுவின் மூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.66 ஆயிரம் ரூபாயை மதுவுக்காக செலவிடுகின்றன. தமிழ்நாட்டில் 75 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மது குடிப்பதாக வைத்துக் கொண்டால், அவர்களின் குடும்பங்களில் இருந்து ஆண்டுக்கு தலா ரூ.2 லட்சம் பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் மதுவைக் காட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து விட்டு, சில ஆயிரங்களை மட்டும் உதவித் தொகையாக வழங்குவது தான் திமுகவின் சமூகநீதியா?

வீதி தோறும் மதுக்கடைகளையும், சந்துக் கடைகளையும் திறந்து திமுக அரசு நடத்தும் மது வணிகத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன. நாள் முழுவதும் கூலி வேலைக்கு சென்று பெண்கள் ஈட்டி வரும் வருவாயை, திமுக அரசால் குடிகாரர்களாக்கப்பட்ட கணவர்கள் அடித்து பிடுங்கிக் கொண்டு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுக அரசின் ஆதரவுடன் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தால் சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த வேதனையிலிருந்து மீண்டு வர முடியாமல் பெண்கள் கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், மகளிர் உதவித் தொகை திட்டத்தால் பெண்கள் முன்னேறி விட்டதாக திமுக அரசு விழா நடத்திக் கொள்வது வெட்கக்கேடு ஆகும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக திமுக அரசு பெருமை பேசிக்கொள்கிறது. மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது ஓட்டை வாளியில் தண்ணீரைப் பிடிப்பதற்கு சமமானதாகும். மாறாக, மதுக்கடைகளை மூடி, கஞ்சா வணிகத்தையும் கட்டுப்படுத்தி விட்டால், எந்த நலத்திட்டமும் பெண்களுக்குத் தேவையில்லை. குடும்ப வருமானத்தைக் கொண்டே அவர்கள் முன்னேறி விடுவார்கள். இது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும். ஆனால், மூன்று தலைமுறைகளாக மதுவை மறந்திருந்த தமிழ்நாடு இளைஞர்களுக்கு மதுவைக் கொடுத்து அவர்களை குடிகாரர்களாக்கி வாழ்க்கையைக் கெடுத்த திமுக அரசு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வராது. மாறாக, தமிழ்நாட்டில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவில்லாத தமிழ்நாட்டை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும். இது உறுதி என அன்புமணி தெரிவித்துள்ளார்.