சென்னையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் பழுதாகி 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக விஜிபி நிர்வாகத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடையவுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களோடு வெளியூர்களுக்கு இறுதி கட்ட சுற்றுலாவிற்கு சென்று வருகிறார்கள். அந்த வகையில் சென்னைக்கு சுற்றுலா வரும் மக்கள் சென்னை மெரினா கடற்கரை, மால்கள், வண்டலூர் பூங்கா, பொழுது போக்கு பூங்கா, போன்றவற்றிற்கு சென்று வருவார்கள். அப்படி சென்னையில் பிரபலமாக உள்ள விஜிபி பொழுது போக்கு பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் ராட்டினத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் விஜிபி பொழுதுபோக்கு மையம் உள்ளது. இந்த பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. நேற்று மாலை 120 அடி உயரம் செல்லக்கூடிய ராட்சத ராட்டினத்தில் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏறி உற்சாக பயணம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ராட்டினம் 120 அடி உயரத்தில் சென்றபோது திடீரென பழுதாகி அந்தரத்தில் நிற்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அலறி துடித்தனர். கிழே நின்று வேடிக்கை பார்த்த மக்களும் கூச்சல் எழுப்பினர். பொதுபோக்கு மைய நிர்வாகிகளுடன் தகராறில் ஈடுபட்டனர்.
பொழுதுபோக்கு மைய ஊழியர்கள் ராட்டினத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரமாகியும் பழுதான ராட்டினத்தை சரி செய்ய முடியாமல் தவித்தனர். இது குறித்து திருவான்மியூர் துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து அந்தரத்தில் அச்சத்துடன் இருந்தவர்களை 4 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ராட்டினம் பழுது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு விஜிபி நிறுவனத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இன்று விஜிபி பொழுது போக்கு பூங்காவில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ராட்டினம் பழுது தொடர்பவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பொழுது போக்கு பூங்காவை தற்காலிகமாக மூட விஜிபி நிர்வாகத்திற்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
