சென்னை விஜிபி பூங்காவில் ராட்சத ராட்டினம் செயலிழந்து, 30 பேர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் சிக்கினர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்குப் பூங்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெரும் பதற்றம் ஏற்பட்டது. பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதில் பயணம் செய்த சுமார் 30 பேர் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.

மாலை 6 மணியளவில் ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, ராட்டினம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால், ராட்டினத்தில் இருந்தவர்கள், சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

ராட்டினத்தில் சிக்கியிருந்த சிலர் உடனடியாக சமூக வலைத்தளங்களில் தங்கள் நிலைமையை விவரித்து, உதவி கோரி பதிவுகளை வெளியிட்டனர். மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து, இரவு 8:30 மணியளவில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராட்டினத்தில் சிக்கித் தவித்தவர்கள், "பாதுகாப்பை உறுதி செய்யாமல் ராட்டினத்தை இயக்கியதால்தான் இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டது. அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் எந்த வசதியும் இங்கு இல்லை" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ராட்டினத்தில் சிக்கியிருப்பவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் பூங்கா பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.