விஜய் நான் உங்கள் ரசிகன் என்று என்னிடம் தெரிவித்தார். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள் என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மதிமுக, அதிமுகவில் இருந்து வெளியேறிய தமிழக அரசியலின் மூத்த தலைவர், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தது விஜய்க்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. தவெகவில் இணைந்த பிறகு நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
விஜய் சொன்னதை கேட்டு நாஞ்சில் சம்பத் பூரிப்பு
அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், ''கடந்த 6 ஆண்டுகளாக நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. பெரியார், அண்ணா வழியை பின்பற்றும் நான் இப்போது தவெகவில் இணைந்துள்ளேன். விஜய் என்னை பார்த்தவுடன் நான் உங்கள் ரசிகன் என்றார். இதைக் கேட்டு நான் பூரித்துப் போனேன். விஜய்யை சந்தித்த தருணத்தில் இருந்து புதிதாக பிறந்ததுபோல் உணர்கிறேன்.
திமுகவினர் இழிவுப்படுத்தினார்கள்
விஜய்க்கு ஆதரவாக பேசியதால் திமுகவினர் சிலர் என்னை இழிவுப்படுத்தினார்கள். அறிவாலயத்தில் இருந்து வசைச் சொற்களால் வசை பாடினார்கள். எனக்கு மிரட்டல் விடுத்தனர். அறிவித்திருவிழா உள்ளிட்ட கூட்டங்களில் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. திமுகவிடம் இருந்து நான் எதையும் கேட்கவில்லை. கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது. இத்தனை நாள் முடக்க பார்த்த என்னை விஜய் இயங்க வைத்திருக்கிறார்.
தவெகவுக்கு இளைஞர்கள் ஆதரவு
தம்பி விஜய் பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை கொள்கை தலைவர்களாக வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பாசறை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று விஜய்யிடம் சொன்னேன். அவர் என்னை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய எனக்கு அனுமதி அளித்துள்ளார். தவெக லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ளது'' என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து செல்லாதது ஏன்?
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை என்று நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''திருப்பரங்குன்றத்தில் முருகனை வைத்து கலவரம் ஏதும் நடக்காதா என ஒரு சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இந்த விவாகரத்தில் விஜய் கருத்து ஏதும் சொல்லாதது நல்லது தான்'' என்றார். மேலும் விஜய் பாஜக கொள்கை எதிரி என உறுதியாக இருப்பதகாவும், பாஜகவை விமர்சிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


