தமிழக அரசியலில் மூத்த தலைவரும், சிறந்த பேச்சளாருமான நாஞ்சில் சம்பத் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
மதிமுகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் நடிகர் விஜய்யின் தவெகவில் இன்று இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று தன்னை தவெகவில் இணைத்துள்ளார் நாஞ்சில் சம்பத். அண்மையில் அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம்வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்தார் ராஞ்சில் சம்பத்
இப்போது தமிழக அரசியலின் மூத்த தலைவரும், சிறந்த பேச்சாளருமான நாஞ்சித் தவெகவில் இணைந்தது விஜய்க்கும், அக்கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் இணைவது விஜய்க்கு கூடுதல் பலத்தை கொடுக்குய்ம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதலில் மதிமுக பின்பு அதிமுக
சிறந்த திராவிட இயக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி வைகோவுக்கு நெருக்கமாக இருந்து வந்தார். ஆனால் பின்பு அவருக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அவருக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கி இருந்தார். நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் உரிய மரியாதை வழங்கப்பட்டது.
அதிமுகவில் இருந்தும் விலகினார்
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இருந்தும் விலகினார். அதன்பிறகு மேடைகளில் தொடர்ந்து திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வந்த அவர் அண்மை காலமாக தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசத் தொடங்கினார். திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
'அறிவுத் திருவிழா'வில் அழைப்பு இல்லை
இதனால் சென்னையில் நடந்த ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா'வில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை வேதனையுடன் தெரிவித்த நாஞ்சில் சம்பத், விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து பேசுவேன் என கூறியிருந்தார். இதனால் அவர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படி தவெகவில் இணைந்துள்ளார்.


