செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாகச் சொன்னால் தவெகவிற்கு ஏன் செல்லவேண்டும். உலகை ஆளக்கூடிய கட்சி பாஜக இப்போதுதான் தம்பி விஜய் கட்சியை தொடங்கியுள்ளார் அதற்குள் லாங் ஜிம் ஹை ஜம்ப் என உலகத்தை தாண்டுவோம் என சொல்கிறார் என நயினார் நாகேந்திரன் விமர்சனம்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்து வந்தவர். அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பதவிகளை பெற்றவர். ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தார். அதிமுக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சூழலில் கூட அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது.

அதிமுகவிற்கான தனி வாக்கு வங்கி உள்ள கட்சி. அதில் யார் இருந்தாலும் அவர்களுக்கு அந்த வாக்கு வங்கி சேரும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றாள் அவர்களுக்கு அதிமுகவின் வாக்கு வங்கி செல்லுமா என்றால் அது கேள்விக்குறி. தேர்தலுக்கு பின்னால் தான் அவர்களது பலம் பலவீனத்தை சொல்ல முடியும். அதிமுக பாஜக கூட்டணிக்கு இன்று வரை எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 5000 திமுக அரசு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் என எனது சார்பில் வலியுறுத்துகிறேன். கேட்டால் செய்யக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எல்லோருக்கும் ஐயாயிரம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் முதலமைச்சர் ஐயாயிரத்தை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

தேர்தலுக்காக தான் பொங்கலுக்கு 5000 கொடுக்க இருக்கிறார்கள் ‌. பொதுமக்கள் ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். மக்கள்தான் அதனை தீர்மானிக்க வேண்டும். மக்கள் தினம் தினம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் மாதந்தோறும் ஒரு லட்சம் நஷ்டத்தில் இருக்கும்போது அவர்கள் 5000 வாங்கிக்கொண்டு எப்படி வாக்களிப்பார்கள். ஜனவரி 15 வரை நாள் உள்ளது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்ல அனைவரையும் ஒருங்கிணைக்கும் நாள் இருக்கிறது அவசரப்படாமல் இருங்கள். உலகத்தை ஆளக்கூடிய மிகப்பெரிய கட்சியை பாஜக அன்புக்குரிய தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார்.

எடுத்த உடனேயே லாங் ஜம்ப் ஹை ஜம்ப் என உலகத்தை தாண்டுவோம் என சொன்னால் எப்படி. ஒரு தேர்தலில் நின்று தனது செல்வாக்கை நிரூபித்துவிட்டு வெற்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் ஒத்துக் கொள்ளலாம். எம்ஜிஆர் வேறு, விஜய் வேறு. எம்ஜிஆரை வைத்து தான் அந்த காலத்தில் திமுக இருந்தது என்பதை மறக்கக்கூடாது.

எம்ஜிஆர் புரட்சித்தலைவராக வந்து கட்சியை தொடங்கினார் தம்பி விஜய் தற்போது நடிகராக தான் உள்ளார். செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால் அவர் ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று இருக்க வேண்டும் அவர் அப்படி போக வேண்டிய அவசியமே இருந்திருக்காது அவர் எங்களுடன் இருந்திருக்கலாம். அதிமுக உள் கட்சி பிரச்சனையை நான் பேசினால் சரியாக இருக்காது. எங்களது கூட்டணி விவகாரம் குறித்து நாங்கள் பேச முடியும்.