பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ராமருடன் ஒப்பிட்டு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன வேதனை அடைந்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

Nainar Nagendran poster controversy : தமிழகத்தில் திமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களில் பாஜவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும். மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று தமிழகம் வந்தார். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினார். 

இதனையடுத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிலையில் நெல்லையில் பல்வேறு இடங்களில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வருங்கால முதலமைச்சர் நயினார் நாகேந்திரனே என போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

கடவுள் ராமரோடு இணைத்து நயினார் நாகேந்திரன் போஸ்டர்

இதே போல கடவுள் ராமர் படத்தை நயினார் நாகேந்திரன் புகைப்படத்தோடு இணைத்தும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்தபோஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான்.

பாஜகவினரை கண்டித்த நயினார் நாகேந்திரன்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.