ஓபிஎஸ் தன்னிடம் பேசவில்லை. நான் தான் அவரிடம் பேசினேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நயினாருக்கு தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார்.
OPS-Nainar Nagendran Clash: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்த்த்து பேசினார். ''முதல்வர் ஸ்டாலினுடன் அரசியல் ஏதும் பேசவில்லை. மருத்துவமனையில் இருந்து திரும்பிய முதல்வரிடம் நலம் விசாரிக்கவே அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு'' என்று ஓபிஎஸ் விளக்கம் அளித்திருந்தார்.
ஓபிஎஸ்-நயினார் நாகேந்திரன் மோதல்
மேலும் ''பாஜக தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்தது வருதத்தை தருகிறது. மாநிலத்துக்கு கல்வி நிதியை வழங்காமல் இருப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல'' என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஓபிஎஸ் விலகியது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''ஓபிஎஸ் என்ன காரணத்துக்காக விலகினார் என்பது தெரியவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருப்பேன்'' என்று கூறியிருந்தார்.
நயினார் உண்மையை பேச வேண்டும்
இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய ஓபிஎஸ், ''பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் நான் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்குப் புறம்பானது. நயினாருக்கு நான் 6 முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் சொல்வது பொய்
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுகளை நயினார் நாகேந்திரன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஓபிஎஸ் என்னையோ, என் உதவியாளரையோ அழைக்கவில்லை. நான் தான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறியிருப்பதாக எனக்கு தெரியாது. அந்த கடிதம் என்னை வந்து சேரவில்லை. அவர் வாய்வழியாக சொல்கிறாரே தவிர அவரிடம் எந்த ஆதாரமும் இருக்காது. ஓபிஎஸ் ஒரு முடிவை எட்டு இப்படி வேறு பல காரணங்களை கூறுகிறார். அவர் என்னை குறை சொன்னாலும், நான் அவரை குறை சொல்ல மாட்டேன்'' என்று தெரிவித்தார்.
தமிழிசை ஆதரவு
தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் இந்த விவகாரத்தில் நயினர் நாகேந்திரனுக்கு சப்போர்ட் செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம்-நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
