நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அவரது உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநராக இருக்கும் இல.கணேசன் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு இல.கணேசன் வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இல.கணேசன் அப்பல்லோவில் அனுமதி
இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
அண்மையில் 80வது பிறந்த நாளை கொண்டாடினார்
நாகாலாந்து மாநிலத்தின் 19வது ஆளுநராக 2023 பிப்ரவரி 20 முதல் இல.கணேசன் பதவி ஏற்றார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூத்த தலைவராவார். இவர் முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராக (2021 ஆகஸ்ட் 27 முதல் 2023 பிப்ரவரி 19 வரை) மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு (2022 ஜூலை 18 முதல் 2022 நவம்பர் 17 வரை) பணியாற்றியவர். தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அண்மையில் இல.கணேசன் தனது 80வது பிறந்த நாளினைக் கொண்டாடினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
