- Home
- Tamil Nadu News
- 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!
3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!
சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை, போத்தனூர், மங்களூரு, திருவனந்தபுரம், நாகர்கோவில், தாம்பரம், செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 14 முதல் 18 வரை இயக்கப்படும்.

தொடர் விடுமுறை
சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் நாள் தோறும் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சொந்த ஊரை விட்டும், உறவினர்களை விட்டும் வெளியூர்களில் பணிக்காக வருடம் முழுவதும் உழைத்து வருகிறார்கள். அப்படி வெளியூரில் வேலைக்காக செல்லும் நபர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நிகழ்வுகளுக்காகவும், வார விடுமுறை அல்லது தொடர் விடுமுறைக்காக மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். இவர்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே
இதுதாடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வருகிற 14-ம் தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில், வரும் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மங்களூர் - திருவனந்தபுரம்
அதேபோல் வருகிற 14, 16 ஆகிய தேதிகளில் மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, 14 மற்றும் 16-ம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், 15, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம்
மேலும் வரும் 17-ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் 18-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை
மேலும் வருகிற 14-ம் தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும். அன்று இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் 17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.