Asianet News TamilAsianet News Tamil

மீனவர் பிரச்சினை: கூட்டு நடவடிக்கைக் குழுவினை புதுப்பிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

மீனவர் விடுதலை, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

MK Stalin urges PM Modi to renew the Joint Action Group to resolve the fishermen issue smp
Author
First Published Feb 9, 2024, 5:16 PM IST | Last Updated Feb 9, 2024, 5:16 PM IST

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்கடையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், இதனால் பல தலைமுறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளதை குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின், பாரம்பரியமாக  தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்தி வரும் மீன்பிடிப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுவதையும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெருமளவில் பாதித்துள்ளதோடு, மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சரண் சிங்கிற்கு பாரத ரத்னா: பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த ஆர்.எல்.டி. - இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி!

2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த 28 நாட்களில் மட்டும், 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் மீது  அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள் கவலையை மேலும் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இதுபோன்ற செயல்கள் மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், மீனவர்களுக்கு பொருளாதார பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கிட இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரமளிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்னரே தான் எழுதியிருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை என வேதனையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்திற்கு இன்றியமையாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளதையும், முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், படகுகள் இதுபோன்று நாட்டுடையாக்கப்படுவது, மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் ஏதுவாக, மேற்படி சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறும் தனது கடிதத்தில் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024: 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!

இலங்கை வசம் தற்போதுள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 3-1-2024 அன்று பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், 5-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுவித்திடவும், உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios