சம்பந்தி இறந்த துக்கத்தில் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் கடமை தவறாமல் ஓசூரில் 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 400 பேருக்கு வேலை கிடைக்கும்.
MK Stalin inaugurates 2 projects in Hosur: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 400-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 2 விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்தார்.
ஓசூரில் 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்
தைவான் நாட்டைச் சேர்ந்த டெல்டா குழுமம் மின்சார மற்றும் எரிசக்தி மேலாண்மை தீர்வுகள் மற்றும் அதிநவீன மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகளில், உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஓசூரில் உள்ள இக்குழுமத்தின் துணை நிறுவனம் – டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எரிசக்தி விநியோகம், DC விசிறிகள் மற்றும் Switch-Mode எரிசக்தி விநியோக பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டில் விற்பனையும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக் துறையில் முன்னணியில் தமிழ்நாடு
பின்பு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''இந்தியாவின் முன்னணி Electronics Production and Export மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையேயான நம்முடைய கூட்டுமுயற்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் உங்களின் விரிவாக்க திட்டங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் திறன்வளத்தை கருத்தில் கொண்டு, ஒரு R&D Centre-யை நீங்கள் சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் எங்கள் திராவிட மாடல் அரசு முழுமையாக வழங்கும்'' என்று தெரிவித்தார்.
துக்கத்திலும் கடமை தவறாத முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவால் காலமானார். ''வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் இரங்கல் தெரிவித்து இருந்தார். இப்படி துக்கத்தில் மூழ்கி இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் கடமை தவறாமல் ஓசூரில் அரசு விழாவில் பங்கேற்று 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் எடுத்துக்காட்டாக உள்ளதாக திமுகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.


