எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக.வில் இருந்து ஒவ்வொரு முக்கிய தலைவராக வெளியேற்றப்பட்டு வருவதால் அக்கட்சி பலவீனமடைந்து வருவதோடு இது திமுக.வுக்கு சாதகமாக மாறி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவசர அவசரமாக முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து நீக்கிய சசிகலா தான் முதல்வராக விருப்பப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு அவர் சிறை சென்றார். சசிகலா சிறை சென்ற நிலையில், பாஜக ஆதரவோடு அதிமுக.வின் முன்னணி தலைவராக அறியப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினார் பழனிசாமி.
அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய நிலையில், ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இதனிடையே ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது வரை அதிமுக எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்றது கிடையாது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தொண்டர்கள் ஏற்கவில்லை என்று தொடர்ந்து கருத்துகள் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.
இந்த கருத்தை முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான செங்கோட்டையன் வெளிப்படையாக தெரிவித்தார். மூத்த நிர்வாகியின் கருத்துக்கு பழனிசாமி மதிப்பளிப்பார். அதன் அடிப்படையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் பலரும் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்படுவதாக உத்தரவிட்டு அனைவரது வாய்க்கும் பூட்டு போட்டுள்ளார்.
அதிமுக.வில் நான் தான் அனைத்தும் என்ற எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கால் பல மூத்த தலைவர்களும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக கூற முடியாமல் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள அமைதி காத்து வருவதாக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொடர்ந்து பலவீனப்பட்டு வருவது ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக மாறி வருகிறது.
குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் அதிமுக.வை விமர்சிக்கவே வேண்டாம், பாஜகவின் பெயரை மட்டும் உச்சரித்தால் போதும் என்ற நிலை திமுக.வுக்கு எழுந்துள்ளது.
