செங்கோட்டையன் பாஜகவில் இணைகிறாரா? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக ஒற்றுமை மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்துப் பேசினார். திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், டிடிவி தினகரனின் கூட்டணி விலகலுக்குத் தான் காரணமில்லை என்றும் விளக்கமளித்தார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாகப் பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. திமுகவுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அதிமுக கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மேலும், டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியே பிறருக்குக் கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல. அதுபோல வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தோல்வியைத் வழங்குவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்றும், அவர் அகங்காரத்துடன் செயல்படுகிறார் என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக - பாஜக ஒரு கூட்டணியாக இருந்தது. அப்பொழுது டிடிவி தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியோடு இருந்து 65 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம். பாமக கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், "பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை எனக்கு விளங்கவில்லை. திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல" என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுவரை அதற்கான பதில் இல்லை. கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத் தாங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், பாஜகவிற்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை அழைப்பது நாகரீகமாக இருக்காது என்று அவர் பதிலளித்தார்.