தொகுதி மறுவரை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக நாடகம் ஆடுவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி, அதிமுகவின் கபட நாடகம் எடுபடாது என்றார்.

'அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்'

தொகுதி மறுவரை தொடர்பாக தமிழக அரசின் சார்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட 55 கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இதனையடுத்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் திமுக அரசு பறிகொடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் கச்சத்தீவு, நீட் தேர்வு எனஅனைத்து உரிமைகளையும் திமுக அரசு மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டதாக விமர்சித்தார். 

தொகுதி மறு சீரமைப்பு அனைத்து கட்சி கூட்டம்.! அதிமுக, தவெக நிலைப்பாடு என்ன.?

'தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்த திமுக அரசு'

தமிழக அரசு தற்போது கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் என்பது ஒரு நாடகம் என்றும் கூறினார். தமிழகத்தின் உரிமையை திமுக தான் தாங்குகிறது என்பது போல ஒரு மாயையை உருவாக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக அரசு கூட்டி இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

ஜெயக்குமாருக்கு ரகுபதி பதிலடி

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.

தென்மாநில எம்பிக்களை கொண்ட கூட்டுக் குழு.! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பாஜகவுடன் கள்ளக்கூட்டணி

தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.

பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை. முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.