உயிர்பலி வாங்கிய ஷவர்மா; அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அதே உணவகத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 40 வாடிக்கையாளர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத உணவகங்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.