கூட்டணி குழப்பத்தில் இருக்கும் கமல்ஹாசன்: இப்போ என்ன ப்ளான்?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேருவது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரத் தகவல்கள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளன. பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள எதிர்கட்சிகள், இரண்டு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். “கட்சியின் தலைவர் எம்பி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுகிறார், அது கோவையாகவும் இருக்கலாம் மற்ற இடங்களாகவும் இருக்கலாம். அவர் விருப்பப்பட்டால் இங்கு நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த கையோடு, அவரது கட்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார் கமல்ஹாசன். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.77 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி களமிறங்கியது. ஆனால், தோல்வியை தழுவியது. கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.
ஆனால், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு கண்டிப்பாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். தனித்து நின்றால் சாதிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பல்வேறு தருணங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த அவர், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் டெல்லியில் கைக்கோர்த்தார்.
மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!
எனவே, கமல்ஹாசன் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்களிடம் பேசியபோது, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவது குறித்து கமல்ஹாசன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றனர்.
பாட்னாவிலும் பெங்களூருவிலும் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கமல்ஹாசன் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் தனது ஆதரவுத் தளத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி இறங்கியுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதன் ஒருபகுதியாகவே, ‘மக்களோடு மய்யம்’ என்ற நிகழ்வை அக்கட்சியினர் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கமல்ஹாசன் முடிவெடுப்பார் எனவும், தற்போது கட்சியின் வாக்கு வங்கியை ஆதிகரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், கூட்டணி விவகாரத்தில் கமல்ஹாசன் எந்த கருத்தையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால், கூட்டணி தொடர்பாக திட்டவட்ட முடிவெடுக்க முடியாமல் குழப்பத்திலேயே கமல்ஹாசன் இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகளையும் மக்கள் நீதி மய்யம் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியும் கமல்ஹாசனை அரவணைத்துக் கொள்ளவே விரும்புவதாக தெரிகிறது. முதல்தலைமுறை வாக்காளர்கள் குறிப்பாக, நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை ஈர்க்க கமல்ஹாசன் அவசியம் என்பதால், அவரை திமுக உபயோகப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மேலும், கமலுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசவும் வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை திமுக கூட்டணியில் இணையவில்லை என்றால், காங்கிரஸ் மூலம் அவர் கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.