மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நிலவி வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை பழங்குடியின சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணியின்போது, வன்முறை வெடித்தது. அது அம்மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் முழுவதுமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் மணிப்பூரை விட்டு காலி செய்துள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், ராஜஸ்தான் மாநில சட்ட-ஒழுங்கு, மேற்குவங்க மாநில பிரச்சினைகளை பாஜகவினர் கையில் எடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். ஆனால், இது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமை குறித்த விவாதத்தைத் தவிர்ப்பதற்கான திசை திருப்பும் தந்திரம் என்று எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நிலைமையை மணிப்பூருடன் ஒப்பிட்டு பேசும் பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாகவும் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாறம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“மணிப்பூர் சமவெளிகளில் குக்கிகள் எஞ்சியிருக்கிறார்களா? அல்லது சுராசந்த்பூர் மற்றும் மணிப்பூரின் மற்ற மலை பிரதேசங்களில் மெய்தி இனத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிக்கைகள் உண்மையாக இருந்தால், மணிப்பூரில் கிட்டத்தட்ட இன அழிப்பு நடந்து முடிந்து விட்டது.” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மெய்தி சமூகம் சமவெளியிலும், குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் மலைகளிலும் வசித்து வருகின்றனட்ர் என்பது கவனிக்கத்தக்கது.
மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களின் ஆணைகள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அப்பால் இயங்க முடியாது எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களின் நிலைமையுடன் மணிப்பூரின் நிலைமையை எப்படி ஒப்பிட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம், “மத்திய அரசு திறமையற்று, ஒருசார்புடன் இயங்குவது மட்டுமல்லாமல், கேவலமான ஒப்பீடுகளை செய்து திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்வது இரக்கமற்றது மற்றும் கொடூரமானது” எனவும் சாடியுள்ளார்.
மேலும், “பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள், ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.” எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சியடைந்து விட்டது; மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது எனவும் ப.சிதம்பரம் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை - கனிமொழி எம்.பி., காட்டம்!
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.