பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வர். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.

வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும்.  

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில்  தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலை போன்று தமிழ்நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகத்தலமாக கருதப்படுகிற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை ஆன்மிக ஆர்வலர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.