மனுதாரரை மட்டுமாவது மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் காவல்துறை திட்டவட்டமாக மறுத்து விட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவிட்டு இருந்த நிலையில், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் இன்று மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தவிட்டார்.
நீதிபதியின் அதிரடி உத்தரவு
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை நீக்கிய நீதிபதி, இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றியபிறகு நாளை இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் லோகநாதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இன்றே தீபம் ஏற்றும் உத்தரவை கடைபிடிக்காவிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் நீதிபதி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட பாஜகவினர், இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றத்துக்கு விரைந்து சென்றனர்.
காவல்துறை மீண்டும் மறுப்பு
இதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அங்கு விரைந்து சென்றார். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதால் மலை மேல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
நயினார் தலைமையில் திரண்ட இந்து முன்னணியினர்
அங்கு ஆயிரக்கணக்கான பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனுதாரருடன் 10 பேரை மலையேற அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் தெரிவிக்கப்படது. இல்லையெனில் மனுதாரரை மட்டுமாவது மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் காவல்துறை திட்டவட்டமாக மறுத்து விட்டது.
நயினார், எச்.ராஜா கைது
இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் இந்து முன்னணியினர், பாஜகவினர் மலை மேல் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கு சாலையில் அமர்ந்து கலைந்து செல்ல மறுத்த இந்து முன்னணியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


