திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீபத்தூணில் இன்று மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இப்போது மீண்டும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றியபிறகு நாளை இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் லோகநாதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இன்றே தீபம் ஏற்றப்பட வேண்டும்
இன்றே தீபம் ஏற்றும் உத்தரவை கடைபிடிக்காவிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறைக்கு நீதிபதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபம் ஏற்றும்போது காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இன்று பாதுகாப்பு கொடுத்தது குறித்து நாளை மதுரை காவல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
நேற்று நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு
கார்த்திகை தீபத் திருநாளான நேற்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபடலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று திருப்பரங்குன்றத்தில் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த நீதிபதி மனுதாரர் சிஆர்பிஎஃப் படையினரின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றலாம் என்று கூறியிருந்தார். ஆனால் தமிழக காவல்துறை சிஆர்பிஎஃப் படையினரையும், இந்து முன்னணி அமைப்பினரையும் மலை மேலே செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


