திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் மக்களை பிரித்தாளும் திமுகவின் சூழ்ச்சி இங்கு எடுபடாது என்றும்ன் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று மீண்டும் அதிரடியாக உத்தரவிடுள்ளார். நேற்று தனது உத்தரவை திமுக அரசு செயல்படுத்த தவறியதால் நீதிபதி மீண்டும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கியதாக திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கபட நாடகம் ஆடும் திமுக அரசு

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இபிஎஸ், ''மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்மதமும் சம்மதம்

'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார். இதேபோல் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்பரங்குன்றம் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

நல்லதொரு தீர்ப்பு

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜன் செல்லப்பா, ''திமுக அரசு ஏற்படுத்திய இத்தனைப் பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தின் சரியான, நியாயமான தீர்ப்பே உரிய முடிவாக இருக்கும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் படி, சட்டத்தின் மீதான முழு நம்பிக்கையுடன் காத்திருந்தோம். திருப்பரங்குன்றம் தொகுதிவாழ் மக்கள் எண்ணியபடி பொது அமைதியை நிலைநாட்டும் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கவில்லை

மத ரீதியான நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசுக்கு ஒரு செயற்பாட்டு முறை இருக்கிறது. நேற்றைய தினம், அதை முற்றிலும் மீறிய திமுக அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்காமல், காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு, வன்முறை, அராஜகத்தை ஏற்படுத்தியது, திருப்பரங்குன்றம் வரலாற்றில் திமுக அரசு இழைத்த கரும்புள்ளியாக அமைந்துவிட்ட நிலையில், அதை துடைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இறை உணர்வோடு வந்த பக்தர்கள்

எளிய மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் போதும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை இரவோடு இரவாக ஒடுக்கிய போதும், "நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுகிறோம்" என்று சொன்ன திமுக அரசுக்கு, அதே உயர்நீதிமன்ற உத்தரவோடு, கார்த்திகை தீபம் ஏற்ற இறை உணர்வோடு பக்தர்கள் வந்தபோது மட்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தோன்றவில்லையா?

மத நல்லிணக்கம்

போலீஸ் படை, வஜ்ரா வாகனம் என நேற்று காலையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது இந்த திமுக அரசு தானே? திமுக அரசின் இரும்புக்கரத்தை குற்றவாளிகள் மீது ஏவ சொன்னால், உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்த பக்தர்கள் மீது நேற்று ஏவபட்டுள்ளது வெட்கக்கேடானது. அமைதியின், ஆன்மீகத்தின், மத நல்லிணக்கத்தின் உறைவிடமான நம் திருப்பரங்குன்றத்தில், திட்டமிட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்திய இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, உயர்நீதிமன்ற அமர்வால் தங்களுக்கு குட்டு வைத்து குறிப்பிடப்பட்டுள்ள மத நல்லிணக்கம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை பிரித்தாளும் அரசியல்

திமுக நினைக்கும் மக்களை பிரித்தாளும் அரசியல் என்பது ஒருபோதும் திருப்பரங்குன்றத்தில், தமிழகத்தில் எடுபடாது! அதை மாண்புமிகு புரட்சித்தமிழர் அவர்களின் சீரான தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது! எனவே, இதுபோன்ற அரசியல் அற்பத்தனத்தை எல்லாம் கைவிட்டு, பொது அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டும் எண்ணத்தோடு மீதமுள்ள நான்கு மாதங்களாவது செயல்பட வேண்டும் என திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பில் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.