லாரி மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில், இன்ஸ்பெக்டர், கார் டிரைவரான போலீஸ்காரர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் அடுத்த சாத்தங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் (48). போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வாகனத்தை போலீஸ்காரர் சதீஷ் (38) ஓட்டி சென்றார்.

மணலி 200 அடி சாலையி,ல் மணலி ஆமுல்லைவாயல் தரைப்பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத சதீஷ், போலீஸ் வாகனத்தை நிறுத்தினார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில், காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. கண்ணாடி குத்தியதில் கோபிநாத், சதீஷ் இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், 2 பேரையும் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

புகாரின்படி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் மணலி புதுநகரை சேர்ந்த நாகராஜ் (45) என்பவரை கைது செய்தனர்.