கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது. விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து எதையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கரூருக்கு விரைந்து சென்ற நிலையில், தவெக தலைவர் விஜய் இரவோடு இரவாக சென்னைக்கு பறந்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 8 நாட்களுக்கு மேலாகியும் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உயிரிழப்புக்கு காரணமான விஜய் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார்? என்ற கேள்வியை பலரும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
வெளியே வாங்க விஜய்
இந்நிலையில், விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து துணிந்து நிற்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து அகற்ற அவர் மீது ஒரு சிலர் கார்னர் செய்கின்றனர். அவரை ஒடுக்கி தேர்தல் பாதைக்கு வர விடாமல் சிலர் தடுக்க முயல்கின்றனர். ஆகவே விஜய் முதலில் வெளியே வர வேண்டும்.
அரசியலில் துணிச்சல் வேண்டும்
கைதுக்கு பயந்தெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. கைது செய்தால் ஒரு 15 அல்லது ஒரு மாதம் ஜெயிலில் வைப்பார்களா? இதற்கெல்லாம் பயப்படக் கூடாது. ஆகவே விஜய் பயத்தை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். தவெகவினர் வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு இருப்பது அரசியலில் நல்லதல்ல. பயமின்றி துணிச்சலுடன் எதையும் எதிர்கொண்டால் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். அரசியலில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டால் அதை நிரப்புவது கடினம். ஆகவே விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து கரூர் சம்பவத்துக்கு பிறகு ஏன் சென்னை சென்றார்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.
விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, ''மாநில அரசு அமைக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையங்கள் அந்த அரசின் வழிகாட்டுதல்படி தான் அறிக்கை கொடுக்கும். அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் தமிழக அரசுக்கு எதிராகவோ, காவல் துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்காது. எனவே கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து விசாரணை நடத்தலாம். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடக்கும்'' என்று தெரிவித்தார்.
