- Home
- Tamil Nadu News
- கைவிரித்த உயர்நீதிமன்றம்..! உச்சநீதிமன்ற படியேறிய புஸ்ஸி ஆனந்த்..! முன் ஜாமீன் கிடைக்குமா?
கைவிரித்த உயர்நீதிமன்றம்..! உச்சநீதிமன்ற படியேறிய புஸ்ஸி ஆனந்த்..! முன் ஜாமீன் கிடைக்குமா?
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். தலைமைறைவாக உள்ள இருவரையும் காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். இதேபோல் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜையும் போலீஸ் கைது செய்தது.
புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் தலைமறைவு
அதே வேளையில் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் தலைமறைவாகி விட்டனர். இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்தால் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் புஸ்ஸி ஆனந்த் நடுக்கடலில் படகில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆனால் உயர்நீதிமன்றம் இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டதால் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன் ஜாமீன் மனுவை மிக விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி இவர்கள் இருவரும் நாளை கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்குமா?
அதன்பேரில் உச்சநீதிமன்றம் இருவரின் மனுவை விரைவாக விசாரிக்குமா? புஸ்ஸி ஆனந்துக்கும் சி.டி. நிர்மல் குமாருக்கும் முன் ஜாமீன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றமும் முன் ஜாமீன் கொடுக்க மறுத்து புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தவெக தலைவர் விஜய் சட்ட வல்லுனர்களும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் காவல்துறை, தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு கூட செய்யாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஏன் தயக்கம்? தவெகவும், திமுகவும் அண்டர் டீலிங் வைத்துள்ளதா?' என திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.
திமுக அரசின் பதில் என்ன?
இதற்கு பதில் அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ''கரூர் சம்பவத்தில் தமிழக அரசு அனாவசியமாக யாரையும் கைது செய்யாது. தேவைப்பட்டால் தவெக தலைவர் விஜய்யும் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் காவல்துறை சரியான வழியில் சென்று வருகிறது'' என்று தெரிவித்தார்.