விபத்து ஏற்படுத்தியதாக விஜய் பிரசார வாகனத்தின் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
விஜய் பிரசார வாகன விபத்து
இதற்கிடையே விஜய் பிரசார வாகனம் தவெகவினரின் பைக்குகள் மீது மோதிய சிசிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது நாமக்கல்லில் பிரசாரம் முடிந்து கரூர் நோக்கி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விபத்து ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று காவல்துறையினருக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளில் அதாவது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய தவெகவினர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விஜய் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
விஜய் பிரசார வாகனத்தை ஓட்டி தான் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வது ஏன்? என பல்வேறு தரப்பினர் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
