கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் தவெக உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தவெக தலைவர்களை பிடிக்க தனிப்படை

மேலும் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களின் முன் ஜாமீன் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்

கரூரில் விஜய் பேசத் தொடங்கிய ஆரம்பத்திலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ்கள் சென்றன. திமுக அரசு வேண்டுமென்றே கூட்டத்துக்குள் காலியான ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாக கருதிய தவெக தொண்டர்கள் சிலர் அதில் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுரை சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தவெக உறுப்பினர் சரண்

இது தொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்க செய்துள்ளார்.