Karur Stampede: தன் மீதான அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருவோம் என்று தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் உடனே சென்னை கிளம்பி சென்றது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. சென்னை சென்ற பிறகும் வீட்டை விட்டு வெளியே வராத விஜய், 3 நாள் கழித்தே கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டார்.

தலைமறைவான விஜய், தவெக நிர்வாகிகள்

ஆனாலும் அவர் ஏன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை? என பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசினார். விஜய் மட்டுமின்றி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தலைவர்கள் சி.டி.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் தலைமறைவானார்கள்.

ராஜ்மோகன் மீது கடும் விமர்சனம்

இதேபோல் தவெக துணை பொதுச்செயலாளர் பேச்சாளர் ராஜ்மோகனும் கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியவே வரவில்லை. சமூகவலைத்தளங்களிலும் எந்தவித பதிவும் போடவில்லை. இதனால் நாம் தமிழர், திமுக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அவர் ஓடி ஒளிந்து விட்டதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

நீண்ட அமைதி ஏன்?

இந்நிலையில், சம்பவம் நடந்த 12 நாட்களுக்கு பிறகு ராஜ்மோகன் இன்று மன‌ம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜ்மோகன், ''வேதனையில் இருந்து மீள முடியவில்லை. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

அவதூறுகளை நம்பாதீர்கள்

இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்'' என்று கூறியுள்ளார்.