அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமன் உட்பட ஜல்லிக்கட்டு ஆதரவு இளைஞர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி தாக்குதல் நடத்தினர்.

இதை தட்டிகேட்ட கவுதமன் கடுமையாக தாக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி ஆவேசமான ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுதும் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர  வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு காதில் போட்டுகொள்ளாமல் இருக்கிறது. 

இந்நிலையில் இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் , தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்கிறது. மதுரையில் புகழ் பெற்ற வாடிசாசல் ,அலங்காநல்லூர் , அவனியாபுரம் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் ஜல்லிக்காட்டு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று அவனியாபுரத்தில் இயக்குனர் கவுதமன் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் பொது மக்கள் , ஜல்லிக்கட்டு அமைப்பினர் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். போராட்டக்கார்களை கலைக்கிறேன் என்ற போர்வையில் போலீசார் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டனர். 


சாதாரணமாக ஜல்லிக்கட்டு ஆதர்வாளர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபடுவதை விட்டு தீவிரவாதிகளிடம் நடப்பது போல் கடுமையாக தடியடி நடத்தினர். இயக்குனர் கவுதமனை சட்டையை பிடித்து ஆவேசமாக இழுத்து சென்று பேருந்தில் ஏற்றினர். அதே நேரம் கடுமையாக தடியடி நடத்தியதால் பல இளைஞர்கள் கடுமையான காயமடைந்தனர்.

பேருந்துக்கு ஒரு இளைஞரை சட்டையின் பின் பக்கத்தில் போலீசார் இழுத்ததால் அவரது தொண்டையில் துணி இறுகி அவரது நாக்கு வெளியே தள்ளி மயக்க நிலைக்கு ஆளானார். இதை கவுதமன் தடுத்து கேட்டார். நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா? இப்படி அராஜகமாக நடக்கிறீர்களே என்று கேட்டார். 

என்னடா  ரொம்ப துள்ளுகிறாய் என்று ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது முகத்தில் தடியால் குத்தினார். இதில் கவுதமன் கண்ணுக்கு கீழ் கிழிந்து ரத்தம் கொட்டியது. தொடர்ந்து போலீசார் கடுமையாக தாக்குதல் நடத்தினர். 

கர்நாடகாவில் காவிரி நீரை திறந்துவிடச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது கன்னட வெறியர்கள் பெங்களூரை ரணகளமாக்கினர். தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழர் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தமிழக டிரைவர்கள் ஆடையை உருவி அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால் கர்நாடக அரசும் அவர்கள் போலீசும் பெரிய அளவில் பல்ப்பிரயோகம் செய்யாமல் சாதாரணமாக கையாண்டு பெங்களூருவில் அமைதி ஏற்படுத்தினர். 

ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் உணர்வை வெளிகாட்ட கூட தடை ஏற்படுத்தி பலப்பிரயோகம் என்ற பெயரில் கொடூரமாக தாக்குவது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிவரும் பார்த்தனர். 

போலீசாரின் இத்தகைய அடக்குமுறைகள் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசி என்ற நிலை போல் உள்ளது. மக்களை பாதிக்கும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றாலும் , பணமதிப்பிழப்பு போராட்டம் என்றாலும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை போலீசார் ஏவி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக சமீப காலமாக போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மீது ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்துவது தரக்குறைவாக நடந்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதை தமிழக மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி உள்ளது.
இது போன்ற போக்குகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆதரிப்பது தான் வேதனையிலும் வேதனை.