ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர், இளைஞர்கள் மீது கடுமையாக தடியடியை ஏவிய மதுரை போலீஸ் உயரதிகாரி அது பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது போராட்டம் நடத்துபவர்களை சந்தன கடத்தல் வீரப்பனுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் இளைஞர்கள் , மாணவர்கள் , ஆதரவாளர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு மவுனம் காக்கிறது. 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுத்து வருகிறது. அவனியா புரத்தில் போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமன் மற்றும் இளைஞர்கள் மாணவர்கள் மீது காவல்துறை கடுமையான தடியடி நடத்தியது. இயக்குனர் கவுதமன் குறிவைத்து தாக்கப்பட்டார். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

 இது குறித்து மதுரை காவல் துணை ஆணையர் செல்வராஜிடம் பாலிமர் செய்தியாளர் ஜெபர்சன் அமைதியாக போராட்டம் நடத்துபவர்கள் மீது ஏன் இப்படி பலப்பிரயோகம் நடத்துகிறீர்கள் , ஏன் இப்படி தடியடி நடத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு தடியடி எங்கே நடந்தது என்று சாதாரணமாக கேட்டுள்ளார்.
சார் பலமான தடியடி பிரயோகம் நடந்துள்ளது எங்கே என்கிறீர்கள் ? அமைதியாக தானே போராட்டம் நடத்துகிறார்கள் அவர்கள் மீது

பலப்பிரயோகம் நடத்த காரணம் என்ன என்று கேட்ட போது  , நீங்கள் சந்தன கடத்தல் வீரப்பனை கூட நல்லவன் என்று சொன்ன மீடியாக்கள் தானே என கிண்டலாக செல்வராஜ் குறிப்பிட்டார்.

அப்போது வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் நீங்க அந்த மீடியா தானே அப்படித்தான் பேசுவீர்கள் என்றார். எப்படி பேசுவோம் , அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தினீர்கள் என்று கேட்டபோது அவரும் பதிலளிக்க வில்லை.


நியாமான உணர்வு பூர்வமான போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கைகள் சட்டப்படி இருக்கலாம் , ஆனால் அதில் இவர்கள் ஏதோ தனிப்பட்ட பகையாளிகள் போல் ஆவேசம் காட்டுவது தான் ஏன் என்று தெரியவில்லை என ஒரு போராட்ட இளைஞர் கேள்வி கேட்டார்.