'நெல்லை பாய்ஸ்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தொல். திருமாவளவன், சினிமாவில் வன்முறை மற்றும் கவர்ச்சி கலாசாரம் சித்தரிக்கப்படுவதை கடுமையாகச் சாடினார். நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுவதையும் விமர்சித்தார்.
ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'நெல்லை பாய்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சினிமாவில் காட்டப்படும் வன்முறை கலாசாரம் மற்றும் கவர்ச்சி போக்கிற்கு எதிராக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நெல்லை என்றாலே அரிவாள் தானா?
"நெல்லை என்றாலே 'அரிவாள்' என்ற ஒரு பிம்பம் மக்களிடையே இருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா?" என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
"ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான். ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாசாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்து எனக்கு வருத்தம் உண்டு." என்றார்.
கவர்ச்சிதான் வியாபார உத்தியா?
சினிமாவின் வணிக உத்திகள் பற்றிய தனது கருத்தையும் திருமாவளவன் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
"எல்லோரையும் போல ஒரு குத்துப்பாட்டு இருக்க வேண்டும். நெருக்கமான காதல் காட்சிகள் இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான காட்சிகள் அமைய வேண்டும். அதுதான் வியாபார உத்தி என்று ஒரு வரையறையை வைத்துக்கொண்டு ஸ்கிரிப்ட் எழுதுகிற நிலை இருக்கிறது. அந்த வரையறைகளை உடைக்க முடியும்."
அவர் மேலும் பேசுகையில், "எவ்வளவோ கருப்பொருள்கள் சமூகத்திலிருந்து கிடைக்கின்றன. ஆனால், கடுமையான ரத்தவெறி கொண்ட வன்முறைகள் எல்லா படங்களிலும் இருக்கின்றன. இதைப் பார்க்கப் பார்க்க, வன்முறை என்பது இயல்பானது என ஒரு பொது உளவியல் கட்டமைக்கப்படுகிறது" என்று கவலை தெரிவித்தார்.
வீரம் வேறு, வன்முறை வேறு!
வீரம் மற்றும் வன்முறைக்கு இடையேயான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.
"வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்வதுதான் வீரம். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, எந்தத் தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம். அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாகச் சேர்ந்து வெட்டுவது வீரமல்ல” எனத் திருமா எடுத்துரைத்தார்.
டாக்டர் அம்பேத்கர் ஆயுதம் ஏந்தவில்லை
ரவுடியிசம், ஹீரோயிசம், புரட்சி, வன்முறை ஆகிய அனைத்தையும் குழப்பிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், "அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதச்சார்பற்ற அரசு என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது" என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.


