தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைமையில் களம் காணவும், கூட்டணி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி நிலைபாடு மற்றும் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தவெகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
* தமிழக வெற்றிக் கழக முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்
* 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் களம் காண்போம்
* தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்.
* தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன் த.வெ.க மாநில மாநாட்டை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு. ஆகஸ்ட் 2ம் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் துவக்கம் அதற்கு முன் 2வது மாநாட்டை நடத்த திட்டம்.
* ஜூலை 2வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க தீர்மானம்.
* பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது.
* கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும்.
* தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் நிறுத்த வேண்டும்.
- கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.
தவெகவின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததை அடுத்து அதிமுக பாஜக அழைப்பு நிராகரிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. மேலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
