தென் மாவட்டங்களை மிரட்டும் பேய் மழை.. புயலும் இல்லை.. ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்ய என்ன காரணம்?
தற்போது புயல் சின்னமோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ உருவாகாத நிலையில் தென் மாவட்டங்களில் இந்த திடீர் கனமழைக்கு என்ன காரணம்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை என்றால் சாதாரண மழை இல்லை. இடைவிடாத தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் அதிகனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே போன்று மிக கனமழை பெய்தது. ஆனால் அப்போது வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி இருந்தது. இந்த புயல் சென்னைக்கு அருகிலேயே நீண்ட நேரம் நிலை கொண்டிருந்ததால் அதி கனமழை பெய்தது.
ஆனால் தற்போது புயல் சின்னமோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ உருவாகவில்லை. ஆனாலும் தற்போது தென் மாவட்டங்களில் கனமழை க்கொட்டி தீர்த்து வருகிறது. எனவே தென் மாவட்டங்களில் இந்த திடீர் கனமழைக்கு என்ன காரணம்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தென் குமரி கடல் பகுதியில் இருந்து 200 கி.மீ தொலைவில், இலங்கைக்கு தென் மேற்கு திசையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவே இந்த கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி அதே இடத்தில் நிலவி வருவதால் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீக்கு மேல் அதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்ப்படுகிறது. அதாவது 1 மணி நேரத்தில் 10 முதல் 15 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டல சுழற்சி ஒரே இடத்தில் தொடர்வதால் நாளையும் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலைக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Heavy Rain : தென் மாவட்டத்தை புரட்டி போட்ட கன மழை.! ரயில்கள் ரத்து... வெளியான முக்கிய அறிவிப்பு
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (இது அந்த பகுதியின் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழையை விட அதிகம்).
24 மணி நேரத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை என்றால் அது 1992ல் பதிவான காக்காச்சி (மாஞ்சோலை) 965 மி.மீ. அளவு பெய்தது தான். அதன் பிறகு பெய்த 2வது அதிக மழையும் இதுவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் அவரின் மற்றொரு பதிவில் “ காயல்பட்டினத்தில் இதுவரை 599 மி.மீ மழையும், ஸ்ரீ வைகுண்டத்தில் 525 மி.மீ மழையும், திருச்செந்தூரில் 507 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சமவெளி பகுதிகளில் 24 மணிநேரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி உள்ளது., எந்த புயலும் இல்லாமல் பெய்வது. இது எங்கே முடியப்போகிறது என்று பார்க்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.