தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் கிண்டி , அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை மழை பெய்ததது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. 

சேலம் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் காலை வரை கனஅழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர்  மாவட்டம் கடலூர், பண்ருட்டி பகுதிகளிலும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த மழை ஒரு வரப் பிரசாதமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனிடையே வட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.